எந்திரன்: அருண்பாண்டியன் பதில்!
எந்திரன்: அருண்பாண்டியன் பேசுகிறார்!! எந்திரனிலிருந்து அய்ங்கரன் விலகியது ஏன்?
இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு நிறைய பதிகளைப் பார்த்துவிட்டோம். தங்களின் இந்தக் கேள்விக்கு அவரவர் மனம் விரும்பியதை எழுதி திருப்திப்பட்டுக் கொண்டார்கள் பலர்.
ஆனால் உண்மை.. அது எப்போதும் நிரந்தரமானது! எத்தனை பேர் வண்ணம் பூச முயன்றாலும் நிறம் மாறாதது…
அய்ங்கரன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கருணாமூர்த்தியிடம் இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இதற்கு அய்ங்கரனின் மற்றொரு தயாரிப்பாளர் அருண்பாண்டியன் அளித்துள்ள பதில் இது.
இதோ அவர் கூறியதை அப்படியே தருகிறோம்:
எந்திரன் படத்தை நாங்கள் மிகவும் விரும்பி தயாரிக்க துவங்கினோம். கிஷோர் லுல்லாவும் இதில் பங்கேற்க விரும்பினார். படத்தின் பட்ஜெட் அப்போது ரூ.120 கோடி. ஆனால் சர்வதேச அளவில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி எங்களையும் விட்டு வைக்கவில்லை.
எங்களால் படத்தைத் தயாரிக்க முடியவில்லை, அவ்வளவுதான்.
இந்தப் படத்தால் லாபம் வராது என முடிவு செய்து விற்றுவிட்டதாக நீங்கள்
கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதே…
அப்படி நான் கூறவில்லை. இந்தப் படம் ரூ.120 கோடி வசூலிக்கும் என்று நம்புகிறீர்களா… என்று அவர்களாகக் கேட்ட கேள்வி. அதற்கு நான் சொன்ன பதிலை அவர்கள் விருப்பத்துக்கு வெளியிட்டுள்ளனர்.
படத்தின் பட்ஜெட் எவ்வளவு?
நாங்கள் தயாரிப்பதாக இருந்த நேரத்தில் ரூ.120 கோடி. இப்போது மாறியிருக்கலாம்.
வேறு ஏதேனும் காரணமிருக்கிறதா?
ரஜினி சார் எங்கள் நண்பர். அவரும் நன்றாக இருக்க வேண்டும், நாங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே அவர் படத்தைத் தயாரிக்க முடியாத நெருக்கடியில் மாட்டிக் கொண்டதுதான் எங்களுக்கு வருத்தம்!