சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் 'எந்திரன்' படத்துக்கு ரூ.180 கோடி பட்ஜெட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐங்கரன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸுக்கு மாறியது, 'எந்திரன்'.
ஐங்கரன் தயாரித்தபோது, படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் ஓவர் என்பதால் கைமாறியுள்ள எந்திரனை, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுங்கள் என்று ஷங்கரிடம் சன் பிக்சர்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, தற்போது ரூ.180 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு வருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐங்கரன் தயாரிப்பில் இருந்தபோது, சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகளை ரீ ஷுட் செய்யுமாறும் இயங்குனர் ஷங்கரை, தயாரிப்புத் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளதாம்.
ஏற்கெனவே ஹாலிவுட்டில் பிரபலமான ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் என்பதோடு மட்டுமின்றி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை முன்னிலைப்படுத்தியும் எந்திரனை மேலும் அதிக அளவில் விளம்பரப்படுத்த சன் குழுமம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிரபல ஹாலிவுட் திரைப்பட தொலைக்காட்சி நிறுவனமான ஹெச்.பி.ஓ.விடம் சன் குழுமம் ஏற்கெனவே பேசி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.