கள்ளக்காதலும் குண்டுவெடிப்பும்கள்ளக்காதல் விவகாரம் இல்லாத நாளிதழ்களே இல்லை என்ற அளவுக்கு தமிழ்நாட்டின் நிலை போய்விட்டது. ஆனாலும் க.காதல் விவகாரத்தில் இந்த விஷயம் கொஞ்சம் அதிகம்தான்.
சென்னையில் உள்ள சிபிஐ எஸ்.பி. ராஜுவின் செல்போனுக்கு கடந்த வாரம் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. Ôதாம்பரம், எழும்பூர், மதுரை, கோவை, திருச்சி ஜங்ஷன் ஆகிய இடங்களில் 16&ம் தேதி காலை 9.30&க்கு ஒரே நேரத்தில் குண்டுவெடிக்கும்Õ என அந்த எஸ்எம்எஸ் அலற வைத்தது. பதறிப்போன எஸ்.பி. உடனே அலர்ட் செய்தார்.
மோப்பநாய், மெட்டல் டிடெக்டர், அதிரடி சோதனை என தமிழக ரயில்நிலையங்கள் அல்லோகல்லோலப்பபட்டன. கடைசியில் மிரட்டல் Ôபுஸ்Õ என்று தெரிந்தது. கடுப்பான போலீசார் புரளியைக் கிளப்பியவர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சை டவுன் பகுதியில் இருந்துதான் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அங்குள்ள சிம்கார்டு விற்கும் ஏஜென்ட்களை விசாரித்ததில், அது தஞ்சைக்கு ஒதுக்கப்பட்ட சிம் அல்ல, தஞ்சை முகவரி கொடுத்து வெளியூரில் வாங்கப்பட்டது என தெரிந்தது.
விசாரணை இன்னும் தீவிரமானது. சென்னை தாம்பரத்தில் உள்ள வசந்த் என்பவர் வாங்கிய சிம்கார்டில் இருந்துதான் மிரட்டல் எஸ்எம்எஸ் வந்திருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாமல் மிரளமிரள விழித்தார் அவர். பிறகு எப்படி சொல்வது என்று தயங்கினார். விசாரணையின் இறுக்கம் அதிகமாகவே, குறிப்பிட்ட சிம்கார்டை வாங்கி தஞ்சையில் உள்ள தனது சொந்தக்காரர் செல்வேந்திரனின் மனைவி எழில்ராணிக்கு கொடுத்ததாக கூறினார்.
இதனால் சென்னை மாநகர போலீஸ் மெனக்கட்டு தஞ்சை போக வேண்டிவந்தது. செல்வேந்திரன் வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கம் விசாரித்தார்கள். மனைவி எழில்ராணியோடு சண்டைபோட்டு செல்வேந்திரன் தனியாக வாழ்வதாகவும் தற்போது தஞ்சை அடுத்த அம்மன்பேட்டை கிராமத்தில் எழில்ராணி இருப்பதாகவும் சொன்னார்கள்.
அம்மன்பேட்டை கிராமத்துக்கு போனது சென்னை போலீஸ். அவர் முதலில் முன்னுக்குப் பின் முரணாக சொன்னார். பிறகு தெளிவாக சொன்னார். விசாரணையில் வந்த விஷயங்கள் கீழே:
உறவினர் என்பதால் எழில்ராணியைப் பார்க்க வசந்த் அடிக்கடி வருவார். இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதை சமூகம் கள்ளகாதல் என்றது. சில மாதங்களுக்கு முன்பு வசந்துக்கு சென்னையில் வேலை கிடைத்தது. எழில்ராணியை பார்க்காமல், பேசாமல் எப்படி இருப்பது என்று தவித்தார். தினமும் பேசுவதற்காக தன் பெயரில் ஒரு சிம்கார்டு வாங்கி எழில்ராணிக்கு கொடுத்தார்.
பிறகு தாம்பரத்துக்கு வந்துவிட்டார் வசந்த். தினமும் செல்வேந்திரன் இல்லாதபோது எழில்ராணிக்கு போன் போட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். ஒருநாள் வசந்துடன் எழில் பேசிக்கொண்டிருக்கும்போது கணவர் செல்வேந்திரன் வந்துவிட்டார். கையும் களவுமாக பிடிபட்டார். செல்போனை பிடுங்கி விசாரித்தபோது, சிம்கார்டு வாங்கிக் கொடுத்த விவகாரம் தெரிந்தது. மனைவியிடம் கடுமையாக சண்டையிட்டு அவரது வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
ஆனாலும் செல்வேந்திரன் ஆத்திரம் அடங்கவில்லை. வசந்தை பழிவாங்க நினைத்தார். அந்த சிம்கார்டு மூலம் சென்னை சிபிஐ எஸ்.பி. போனுக்கு இந்த பயங்கர மெசேஜ் அனுப்பி பழிதீர்த்துக் கொண்டார்.
திருவையாறு பகுதியில் மறைந்து திரிந்த செல்வேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இப்போது சென்னையில் செல்வேந்திரன், அவரது மனைவி எழில்ராணி, காதலன் வசந்த் ஆகியோரிடம், 16&ம் தேதி கண்விழிக்காமல் ரயில்நிலையம் ரயில்நிலையமாக அல்லாடி வதங்கிய ஆத்திரத்துடன் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டுள்ளனர்.
நீதி: ஜில்பாவுக்காக சிம்கார்டு வாங்கிக் கொடுக்கும்போது சொந்தப் பெயரில் வாங்காதீர்!