முடிந்தது கெடு: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முதல் தாக்குதல்?
டெல்லி: மும்பை தீவிரவாத செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும், இந்தியாவில் வெறிச்செயல் நிகழ்த்திய தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்திருந்த ஒரு மாத கெடு இன்றுடன் முடிந்தது.
ஆனால் பாகிஸ்தானோ பல சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் முப்படைத் தளபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பாகிஸ்தானுடன் போர் மூளுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தியப் படைகள் பாகிஸ்தான் எல்லையை நோக்கி விரைந்துவிட்டன. விமானங்களும், போர்க் கப்பல்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகளுக்கு தகவல் தெரிவித்த பிரதமர்!
இந்நிலையில் தங்கள் கோரிக்கை எதையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை என்பதை உலக நாடுகளுக்கு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது இந்திய அரசு.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக, இந்தியாவுக்குச் சொந்தமான, ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் விமானத் தாக்குதல் நடத்தக்கூடும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகள் ஆதரவு
தனது பிராந்தியத்தையும், இறையாண்மையையும் காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் தீவிரவாதிகள் முகாம்கள் உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டால் அதன் குறுக்கே நாங்கள் வர மாட்டோம் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நிலைப்பாட்டை இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
இந்தியாவுக்கு எந்த வடிவிலும் உதவ தயார் என ரஷ்யாவும் உறுதியளித்துள்ளது.
-ஏஜென்ஸி