ஆமிர்கானின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகியுள்ள கஜினி, இந்திப் பட வரலாற்றில் இதுவரை எந்தப் படத்திற்கும் கிடைக்காத பிரமாண்ட ஓபனிங்கைக் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு வெளியான பாலிவுட் பிளாக்பஸ்டர்களான சிங் இஸ் கிங், கோல்மால் ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றை முறியடித்து விட்டது கஜினி.
படம் வெளியான முதல் இரு நாட்களிலேயே ரூ. 30 கோடி வசூலைத் தாண்டி விட்டதாம் கஜினி.
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான கஜினி, தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
டிசம்பர் 24ம் தேதி திரையிடப்பட்ட பிரிவியூ ஷோக்களின் மூலம் மட்டும் ரூ. 7 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். இந்த வார இறுதியில் கஜினியின் வசூல் ரூ. 50 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
எந்த இந்திப் படத்திற்கும் இதுவரை கிடைக்காத அளவுக்கு கஜினிக்கு அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளதாம். இதற்கு முன்பு வந்த படங்களுக்கு செய்யப்ட்ட அட்வான்ஸ் புக்கிங்கை விட நான்கு மடங்கு அதிகமாக கஜினிக்கு வசூலாகியுள்ளதாம்.
வெளிநாடுகளிலும் கூட கஜினிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதுவரை ரூ. 20 கோடியை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளதாம் கஜினி.
அமெரிக்காவில் இதுவரை (மூன்றே நாட்களில்) ரூ. 4.5 கோடி வசூலாகியுள்ளதாம்.
இங்கிலாந்தில் டிசம்பர் 26ம் தேதி கஜினி ரிலீஸானது. அங்கு ரூ. 1 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.
மேற்கு ஆசியாவில் இப்படத்திற்கு முதல் இரு நாட்களில் கிடைத்த வசூல் ரூ. 3 கோடியாகும்.
கஜினி உலகம் முழுவதும் 22 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளதாம். அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பால், கஜினி மிகப் பெரிய ஹிட் படமாகும் என்று பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.
படத்தில் ஆசின், ஜியா கான் என இரு நாயகிகள் இருந்தாலும் கூட ஆமிர்கானின் கெட்டப், நடிப்பு, திரைக்கதை ஆகியவைதான் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளதாம்.
ஆரம்பத்தில் இதை ஒரு தமிழ் ரீமேக் என்றுதான் பாலிவுட்டில் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அட்டகாசமான படமாக வந்திருப்பதைப் பார்த்து பாலிவுட்டே மூக்கில் விரலை வைத்துள்ளதாம்.
பல மல்டபிளக்ஸ் தியேட்டர்களில் கூடுதல் பிரிண்ட் கேட்டு தயாரிப்பாளரை அனத்த ஆரம்பித்துள்ளனராம்.
இந்தியா முழுவதும் 1400 பிரிண்டுகளுடன் கஜினி திரையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு 300 பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 36. அமெரிக்கா, கனடாவுக்கு 112 பிரிண்ட், இங்கிலாந்துக்கு 65 பிரிண்ட் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழையும், இந்தியையும் இப்படிக் கலக்கிக் கொண்டிருக்கும் கஜினி படத்தின் ஒரிஜினல் கதை, கய் பியர்ஸ் நடித்த மெமன்டோ படத்தின் கதையை 'லவட்டி' உருவாக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்