(More Picture . . )பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தின் ஆடியோ ஜனவரி 1ம் தேதி ரிலீஸாகிறது. பொங்கலுக்கு படத்தைத் தருகிறார் பாலா.
ஆர்யா, பூஜாவின் நடிப்பில் பாலா இழைத்து இழைத்து உருவாக்கியுள்ள பிரமாண்டப் படம் நான் கடவுள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து வந்த நான் கடவுள் ஒரு வழியாக நிறைவடைந்து விட்டது. பொங்கல் முதல் திரைக்கு வருகிறது.
மிகப் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. பாலாவின் இயக்கம், ஆர்யாவின் அபார நடிப்பு, பூஜாவின் பிரமிப்பூட்டும் இயல்பான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் இசை என ஏகப்பட்ட ஸ்பெஷல் சமாச்சாரங்கள் படத்தில் உள்ளனவாம்.
படத்திற்கு சரமாரியாக விருதுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், யாரும் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக படத்தில் நடித்துள்ள அனைவருமே சொந்தக் குரலில் பேசியுள்ளனராம்.
பாலாவின் சொந்த ஊரான பெரியகுளத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அத்தனை பேரும் சமீபத்தில் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு சொந்தக் குரலில் டப்பிங் பேசிக் கொடுத்து விட்டுச் சென்றனராம்.
படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்தியம் சினிமாஸில் ஜனவரி 1ம் தேதி நடைபெறுகிறது. பிரமாண்டமான அளவில் இதை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
படத்தின் பாடல்கள் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாம். இதுகுறித்து யூனிட் நபர் ஒருவர் நம்மிடம் கிசுகிசுக்கையில்,பாடல்கள் அத்தனையும் அபாரமாக உள்ளன. ஒவ்வொரு காட்சியையும் பாலா சார் அற்புதமாக படமாக்கியுள்ளார்.
இந்த முறை இளையராஜா சாருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும். அவருடைய முயற்சிகள் அசாதாரமானவை. பாலா எந்த அளவுக்கு கடுமையாக உழைத்தாரோ, அதே அளவிலான முயற்சிகளை ராஜா சாரும் காட்டியுள்ளார் என்றார்.